வெள்ளி, 1 ஜூன், 2012

தமிழ் அறிக - 10

ஆசிரியர் தேர்வு வாரியம்: முதுநிலைத் தமிழாசிரியர் தேர்வில் ஒரு வினா

ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27.05.12) நடத்திய முதுநிலை ஆசிரியர் தேர்வில் தமிழ்ப் பாடத்திற்கான வினாத்தாள் சொல்லும்படியானதாக அமைந்திருந்தது. மூன்று மாதங்களாகத் தமிழகம் எங்கும் களைகட்டிய ‘தனிப் பயிற்சி வகுப்புகளில்’ கொடுக்கப்பட்ட பக்கம் பக்கமான வினாக்களில் (இவற்றை மெட்டீரியல் என்று சொன்னார்கள்) இடம்பெறாத பல வினாக்கள் இத்தேர்வில் வந்திருந்தன. அது நல்ல விஷயம்.

மேலோட்டமாகப் பார்த்தால் எளிமையாகத் தோன்றினாலும் தமிழ் இலக்கியத்தில் அடிப்படைக் கல்வியைச் சிறப்பாகக் கற்றவர்கள் மட்டுமே நன்றாக எதிர்கொள்ளும் விதத்தில் வினாக்கள் அமைந்திருந்தன. ‘உண்மை அறிவே மிகும்’ என்பதற்கேற்ற வினாத்தாள் என்று தனிப்பயிற்சி வகுப்புகளை வைத்து இதைச் சொல்லலாம். 

இலக்கணம் தொடர்பாகக் கிட்டத்தட்ட முப்பது வினாக்கள் அமைந்திருந்தன. அதில் ஒன்று:

36. குணசாகரர் எந்தப்பாவினை அந்தணப்பா என்று குறிக்கிறார்?
       A) வெண்பா    B) ஆசிரியப்பா     C) கலிப்பா     D) வஞ்சிப்பா

யாப்பிலக்கண அறிமுகம் உள்ளவர்கள் இந்த வினாவிற்கு ‘வெண்பா’ என்று எளிதாக விடையைத் தேர்வு செய்திருப்பார்கள். பிற பாக்களுக்குரிய தளைகள் எவையும் கலவாமல் தனக்குரிய இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளை ஆகியவை மட்டுமே வரப்பெறுவது வெண்பா. பிற வருணத்தவரின் கலப்பில்லாத சுத்த சுயம்புகள் பார்ப்பனர்கள். ஆகவே வெண்பா அந்தணர்பா ஆகிறது. 

ஆசிரியப்பாவை அரசர்பா என்றும் கலிப்பாவை வணிகர்பா என்றும் வஞ்சிப்பாவை சூத்திரர்பா என்றும் சொல்வர். இலக்கணத்துள் இப்படி வருணத்தைப் புகுத்தும் முறை யாப்பருங்கல விருத்தியுரை எழுதப்பட்ட  காலத்திற்கு முன்னரே வந்துவிட்டது என்பது அவ்வுரை மூலமாகத் தெரிகிறது. யாப்பருங்கல விருத்தியுரை, 

வேதியர், அரசர், வணிகர், சூத்திரர் என்னும் சாதிமேல் சார்த்தி வழங்குவாரும் உளர் எனக் கொள்க. (ப.231)

என்று கூறுகிறது. ’சார்த்தி வழங்குவாரும் உளர்’ என்பதால் விருத்தியுரையாசிரியர் காலத்திற்கு முன்னரே இது வழக்கிற்கு வந்துவிட்டது என்பது விளங்குகிறது. மேற்கோளாக வெண்பா ஒன்றையும் உரையாசிரியர் எடுத்துக்காட்டுகிறார். அது:

வெண்பா முதலாக வேதியர்  ஆதியா
மண்பால் வகுத்த வருணமாம் ஒண்பா
இனங்கட்கும் இவ்வாறே என்றுரைப்பர் தொன்னூல்
மனந்தட்பக் கற்றோர் மகிழ்ந்து.

இவ்வெண்பா எந்நூலில் இடம்பெற்றது என்பது தெரியவில்லை. பிற்காலத்தில் எழுந்த பாட்டியல் நூல்கள் பலவற்றிலும் பாக்களை வருணப் பாகுபாட்டின் அடிப்படையில் பகுக்கும் முறையைக் காணலாம். யாப்பிலக்கணக் கலைச்சொற் பொருள் விளக்க அகராதியில் ‘அந்தணர்பா’ என்பதற்குப் பாவலரேறு ச. பாலசுந்தரம் தரும் விளக்கம்:

பாட்டியல் நூலார் பாக்களை வருண முறையில் பிரித்துக் கூறுமிடத்து வெண்பாவை அந்தண வருணமாகக் கூறுவர். அம்முறையில் வெண்பா அந்தணர்பா எனப்படும்.  (ப.18)

 வருணப் பாகுபாட்டை இலக்கணத்துள் புகுத்திய விதம், அது நிலைபெற்ற காலம் ஆகியவற்றின் பின்னணி குறித்து விரிவாக ஆய்வு செய்ய வேண்டும். அதற்குள் இப்போது செல்லவில்லை. 

யாப்பருங்கல விருத்தியுரையும் பாட்டியல் நூல்களும் சொல்லும் ஒரு செய்தியைக் குணசாகரர் மீது ஏற்றி வினா கேட்கப்பட்டுள்ளது. இது சரியா?

யாப்பருங்கலக் காரிகைக்கு உரை எழுதியவர் குணசாகரர். காரிகையுரையில் ஓரிடத்திலும் பாக்களை வருண அடிப்படையில் பகுக்கும் செய்தி வரவில்லை. அப்படியிருக்கக் ’குணசாகரர் எந்தப்பாவினை அந்தணப்பா என்று குறிக்கிறார்?’ என்னும் வினா எப்படிச் சரியானதாகும்?  வினாவைச் சரியானது என்று கொண்டால் விடை ‘குணசாகரர் எந்தப்பாவையும் அந்தணப்பா என்று குறிக்கவில்லை’ என்றே அமையும். ஆனால் விடை வாய்ப்புகளில் அது இல்லை. 

இந்த வினாத்தாளைத் தயாரித்தவர் எந்தப் பின்னணியில் இவ்வினாவைக் கேட்டிருப்பார்? என் மாணவர் ஒருவரிடம் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது அவர் ‘யாப்பருங்கலக் காரிகை’ நூல் ஒன்றைக் கொண்டு வந்து என்னிடம் காட்டினார்.  திருவையாறு அரசர் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் ச. திருஞானசம்பந்தம் அவர்கள் வெளியிட்டுள்ள காரிகை நூல் அது. பாடத்திட்ட நோக்கில் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள நூல். ஒவ்வொரு தலைப்புக்கு முன்னும் சுருக்கமாகக் கருத்துக்களைத் தொகுத்துத் தருவது திருஞானசம்பந்தம் அவர்களின் முறை. அவ்வாறு ‘வெண்பாவைப் பற்றியக் கருத்துக்கள்’ என்னும் தலைப்பில் அவர் கொடுத்துள்ள கருத்து இது:

...வேற்றுத்தளையும் அடியும் விரவாமல் அமைந்து மேம்பட்டு விளங்குவதால் வெண்பா எனப் பெயர் பெற்றது. இதற்கு வெள்ளைப்பா, அந்தணர்பா என்னும் வேறு பெயர்களும் உண்டு.  (ப.85)

இது குணசாகரர் கருத்தல்ல. வேறிடத்திலிருந்து திருஞானசம்பந்தம் எடுத்துக் கொடுத்ததுதான். குணசாகரர் உரையைப் பார்க்காமல் திருஞானசம்பந்தம் அவர்களின் கருத்தை மட்டும் பார்த்த ஒருவர் குணசாகரர் உரைக்குள் வரும் கருத்துத்தான் இது என மயங்கி அதிலிருந்து இவ்வினாவைக் கேட்டிருக்கக் கூடும். 

எப்படியிருப்பினும் இவ்வினா தவறானது என்பதில் ஐயமில்லை. ஆகவே இவ்வினாவினைத் தவறாகக் கொடுக்கப்பட்ட ஒன்றாகக் கருதி வினாப்பட்டியலில் இருந்து இதை நீக்கிவிட வேண்டும். அல்லது எந்த விடையைத் தேர்வு செய்தவராக இருந்தாலும் அவருக்கு மதிப்பெண் கொடுக்கப்பட வேண்டும். தேர்வர்கள் கோரிக்கை வைப்பார்களா?
                                                                               ----------------
பயன்பட்ட நூல்கள்:
1. மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை (ப.ஆ.), யாப்பருங்கலம், 1998, சென்னை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மறுபதிப்பு.
2. ச. பாலசுந்தரம், யாப்பிலக்கணக் கலைச்சொல் - பொருள் விளக்க அகராதி, 1998, தஞ்சாவூர், தாமரை வெளியீட்டகம்.
3. ச. திருஞானசம்பந்தம், யாப்பருங்கலக்காரிகை, 2007, திருவையாறு, கதிர் பதிப்பகம்.


வியாழன், 31 மே, 2012

கொங்கு வட்டாரச் சொற்கள் - 4

பூப்பு நன்னீராட்டு விழா?

இரண்டு நாட்களுக்கு முன் ‘பூப்பு நன்னீராட்டு விழா’ அழைப்பிதழ் ஒன்று எனக்கு வந்தது. 

பேச்சு வழக்கில் ‘வயசுக்கு வருதல்’ என்கிறோம். ‘ராமாயி வயசுக்கு வந்துட்டா’ என்று ஒரு திரைப்படம்கூட உண்டு. ‘சமைதல்’ என்று சொல்வதும் உண்டு. வாலி எழுதிய பெரும் சர்ச்சைக்கு உள்ளான திரைப்பாடல் ‘எப்படி எப்படி சமஞ்சது எப்படி’ என்பது. இச்சொல்லுக்கு இலக்கியச் சான்றும் உண்டு. தனிப்பாடல் ஒன்றில் ‘மகள் சமையவில்லை’ என்னும் ஆட்சி வருவதாகத் தமிழ் லெக்சிகன் (தொகுதி 3, ப.1303) காட்டுகின்றது. இச்சொல்லுக்குப் ‘பூப்படைதல்’ என்னும் பொருளையும் லெக்சிகன் தருகிறது. எனினும் இன்று சமைதல் என்பது சாதி வழக்காக நிலைபெற்றிருக்கிறது என்று நினைக்கிறேன். குறிப்பாகப் பார்ப்பனர்கள் இச்சொல்லைக் கையாள்கின்றனர்.

‘பெரியவள் ஆதல்’ என்பதும் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. ‘பொண்ணு பெரியவளாயிட்டாளா?’ என்று விசாரிக்கும் வழக்கம் இருக்கிறது. இது இடக்கரடக்கல். வயசுக்கு வருதல், சமைதல் ஆகியவை நேரடியாகப் பெண் பருவமடைதலைக் குறிக்கின்றன. அதைப் பூடகமாக்கிச் சொல்வதுதான் ‘பெரியவளாதல்’ என்பது. ‘பெரிய பையன் ஆகிவிட்டான்’ என்று ஆண்களைச் சொல்வதும் உண்டு. 

’பூப்பு’ என்பது தொல்காப்பியத்திலேயே குறிக்கப்பட்டிருக்கும் மிகப் பழைய சொல். 

‘பூப்பின் புறப்பாடு ஈராறு நாளும் 
நீத்தகன் றுறையார் என்மனார் புலவர் 
பரத்தையின் பிரிந்த காலையான’ 

என்பது கற்பியல் (46) நூற்பா. இதில் பூப்பு என்பதற்கு மாதவிடாய் என்றே பொருள். உரையாசிரியர்களும் அகராதிகளும் இப்பொருளையே தருகின்றனர். நச்சினார்க்கினியர் ‘இருது’ என்று சொல்கிறார். ’ருது’ என்னும் சமஸ்கிருதச் சொல்லை அவ்வாறு பயன்படுத்துகின்றார்.  பெண் பருவமடைதலின் காரணமாக முதன்முதல் நிகழும் மாதவிடாய் என்னும் பொருளில் இச்சொல் பயன்படவில்லை. ஆனால் இன்று ‘பூப்பு நன்னீராட்டு விழா’ எப்படி வந்தது? இந்த வழக்கை உருவாக்கியவர் யார்? 

பெண் பருவம் அடைதலை விழாவாகக் கொண்டாடுதல் மரபு சார்ந்த வழக்கம். அச்சு வளர்ச்சிக்குப் பின் அழைப்பிதழ் அடிக்கும் வழக்கம் உருவான காலத்தில் ‘பூப்பு நன்னீராட்டு விழா’ என்பது உருவாகியிருக்க வேண்டும். இது இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உருவாகியிருக்கலாம். சாமான்ய மக்களும் அழைப்பிதழ் அச்சிடும் வழக்கம் அப்போதுதான் ஏற்பட்டது. அழைப்பிதழுக்காகப் ‘பூப்பு நன்னீராட்டு’ என்னும் சொல்லை உருவாக்கியுள்ளனர். 

இத்தகைய சொற்களை உருவாக்குவதில் அச்சகத்தாருக்கு முக்கியப் பங்குண்டு. இதுவும்  அச்சகம் சார்ந்த ஒருவரின் பங்களிப்பாக இருக்கலாம். தனித்தமிழ் பற்றுக் கொண்டோர், திராவிட இயக்கம் சார்ந்தோர் ஆகிய எவருடைய உருவாக்கமாகவும் இருக்கலாம். இன்று தமிழகம் முழுக்க இது வழக்கில் இருக்கிறது என்று நினைக்கிறேன். ஈழத்தில் ‘பூப்புனித நீராட்டு விழா’ என்னும் தொடர் கையாளப்படுகிறது. காட்சிப்பிழை, மே 2012 இதழில் ‘ஈழப் போர்க்காலங்களிலும் பார்க்கப்பட்ட தமிழ் சினிமா’ என்னும் கட்டுரையில் இராகவன் இத்தொடரைக் குறிப்பிடுகின்றார். இது தமிழகத்தில் வழங்குகிற மாதிரி தெரியவில்லை. 

பெண் பருவமடைதலைச் சடங்காகக் கொண்டாடுவது மனித சமூகத்தின் ஆதிகால வழக்கம். இது வளமைச் சடங்குகளில் ஒன்று. பின்னர் இதைத் தீட்டுக் கழிக்கும் சடங்காகக் கருதும் நிலையும் ஏற்பட்டது. வீடுகளில் கொண்டாடப்பட்ட இச்சடங்கு இன்று திருமண மண்டபங்களை நோக்கி வளர்ந்திருக்கிறது. இச்சடங்கில் தாய்மாமன் பங்கும் அவரது செலவும் முக்கியப் பங்கு வகிக்கும். சில தாய்மாமன்கள் இச்சடங்கிற்குச் செலவளித்தே நொடித்துப் போனதும் உண்டு. அதன்பின் குடும்பத்தில் முதல் பெண்ணுக்கு மட்டும் கொண்டாடினால் போதும் என்ற கட்டுப்பாட்டை மக்களே உருவாக்கிக் கொண்டு மாமன்களைக் காப்பாற்றினர். 

சீர் வரிசைகள், மேளதாளங்கள், பட்டுப்புடவைகள் எனப் பெரும் கொண்டாட்டமாக விளங்கும் இச்சடங்கைக் கொங்கு வட்டாரத்தில் ‘தெரட்டி’ என்பர். ‘திரட்டி’ என்பது பேச்சு வழக்கில் ‘தெரட்டி’ ஆகியுள்ளது.  இது ‘திரட்சி’ என்னும் சொல்லின் திரிபு. ‘திரட்சி’ என்பதற்குத் தமிழ் லெக்சிகன் ‘இருதுசாந்தி’ எனப் பொருள் தருகிறது. இந்தப் பொருளுக்கு சான்று எதையும் அகராதி தரவில்லை. இலக்கியச் சான்று இல்லை. பிற வட்டாரங்களில் இச்சொல் வழங்குவதாகவும் தெரியவில்லை. கொங்கு வட்டாரத்தில் வழங்கும் இச்சொல்லுக்கு மூலம் ‘திரட்சி’ என்னும் எழுத்து வழக்கு என்றாலும் ‘பெண் பருவமடைதல் சடங்கு’ என்னும் பொருள் இப்பகுதியில் மட்டுமே உள்ளது. 

சிறுமியாக இருக்கும் பெண் உடல்ரீதியாகத் திரள்தல் அதாவது நிரம்புதல் என்னும் அர்த்தச் செறிவு கொண்ட இச்சொல் இன்று கொங்கு வட்டாரத்திலும் அருகி வருகிறது. ’பூப்பு நன்னீராட்டு விழா’ என்று மூன்று சொற்களைப் பயன்படுத்தி ஒரு விஷயத்தைக் குறிப்பதைவிட ஒற்றைச் சொல்லால் குறிப்பதே மொழியின் வளத்தைக் காட்டும். இவ்வளம் தமிழ் மொழியில் நிறைய உள்ளது. அதற்கு வட்டார வழக்குகள் சான்று. திரட்டி என்பது அத்தகைய வளத்தைக் காட்டும் ஒற்றைச் சொல். இதைப் பொது வழக்குக்குக் கொண்டு வந்தால் என்ன? ‘திரட்டி அழைப்பிதழ்’ என்று அச்சிட்டால் நன்றாகத்தான் இருக்கும். யாராவது முன்கை எடுப்பார்களா?
                                                                         -------------- 

வெள்ளி, 25 மே, 2012

கவிதை


பாதாள ரகசிய அறை

மனிதத் தலைகள் மாட்டப்பட்ட
பாதாள ரகசிய அறையொன்று
என் வீட்டிலுண்டு

பூப் பறிப்பது போலக்
கூரிய நகம் கொண்டு
கிள்ளி எடுத்த தலைகள்
தேங்காயெனத்
திருகிப் பிடுங்கிய தலைகள்

ரத்தம் பீய்ச்சக்
குரல்வளை அறுத்துக்
கொணர்ந்த தலைகள்
ஒரே வீச்சில் சாய்த்துப்
பலியிட்ட தலைகள்
கவ்விக் கடித்துப்
பிய்த்தெடுத்த தலைகள்

சிரிப்பு உறைந்தவை
விழிகள் நிலைத்தவை
நாக்கு கடித்தவை

பாடம் பண்ணியவை நெடுநாள் காட்சியாகும்
பாடமாகாதவை நாறிப் புழுத்து வீசியெறியப்படும்

பழந்தலைகள் பார்த்துப் பரிதாபப்படவும்
புதுத்தலைகள் கண்டு ரசிக்கவும் எனத்
தினம் ஒருமுறை சுற்றி வருவேன்

நல்ல பராமரிப்புடன் விளங்கும் அவ்வறையில்
இதோ இப்போது கைகாட்டிச் செல்லும்
நண்பனின் தலையும் உண்டு
அவனுக்குத் தெரியாது , பாவம்.

-------